தென்னகத்துப் பதுவை என்று மக்களால் போற்றப்படும் தூய அந்தோனியார் திருத்தலம், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி என்ற ஊரில் உள்ளது. பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் தலையாயத் திருத்தலம் இது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, கொல்லம், புதுவை, கருநாடகம், மும்பை, டில்லி போன்ற இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மதம், இனம், மொழி, நிறம் பண்பாடு கடந்து மக்கள் கூடுகிறார்கள்.
புளியம்பட்டி சுற்றுலாத் தளம் இல்லை. தொழில் நகரம் இல்லை. இங்கு வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை. வங்கிகள் இல்லை. பொழுது போக்கு வசதிகள் இல்லை. சில சமயங்களில் போக்கவரத்துக்கு கூட வழி இல்லை. இது வானம் பார்த்த பூமி. வானம் பொழிந்தால் மட்டுமே மண் விளையும். எல்லா நிலையிலும் பின் தங்கியதுதான் புளியம்பட்டி, வெளிப்புற ஈர்ப்புகளுக்கான எந்த அடையாளங்களும் இல்லாத அநத ஊருக்கு இலட்சக்கணக்கான மக்கள் தேடி வருவதுதான் அனைவரின் வியப்பு! இது எப்படி சாத்தியம்? அந்த அற்புதத்தைதான் தூய அந்தோனியார் செய்து வருகிறார்.
புளியம்பட்டி ஊரைச் சுற்றி ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சமூகத்தில் பறக்கணிக்கப்பட்ட மக்கள் தான் வாழ்கிறார்கள். புளியம்பட்டி “ஆண்டவர் இத்தகையோர் மத்தியில்தான் குடி கொள்வார்” (திருப்பாடல் 9.9) என்ற விவிலிய உண்மைக்கு புளியம்பட்டி ஓர் பெரிய சான்று. புளியம்பட்டி புதுமை விளையும் பூமி. ஒவ்வொரு நாளும் கோடி அற்புதர் புதுமை செய்கிறார். புதுமைப் புனிதர் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகிறார். ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து வரும் மக்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் திரும்புகிறார்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள், உடலால், உள்ளத்தால் நலிந்தவர்கள் திருத்தலத்தில் பல நாட்கள் ஏன் பல மாதங்கள் தங்கி நம்பிக்கையோடு செபித்து, கோடி அற்புதரின் பரிந்துரையால் நலிவு நீங்கி, உடல் மன நலம் பெற்றுச் செல்லும் காட்சியைக் காணக் கோடிக் கண்கள் வேண்டும்.
வந்தவர் உணவைப் பட்டைகளில் அசன விருந்தாக ஏழைகள், கவனிப்பாரற்றவர்கள், அனாதைகள் போன்றோருக்குப் படைக்கிறார்கள். அந்தோணியாருக்கு தங்களை விற்று வாங்கிக் கொள்கிறார்கள். தங்கள் விருப்பம் போல வழிபாடு செய்கிறார்கள். புதுமைக் கிணற்றில் குளித்து மாதா கெபியை வளம் வந்து ஆலயத்தை சுற்றிவிட்டு அந்தோனியாருக்காக மொட்டை போட்டு, தங்கள் நேர்ச்சைகளைச் செலுத்தி புனிதர் வழியாக வரம் பெற்றுச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையையும் அந்தோனியார் நாளாகக் கருதிப் பக்தர்கள் கூடினாலும், தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் ஆயர் வருகையாலும் மக்கள் திரளாளும் திருத்தலமே தனிப் பொலிவு பெறும். “தை மாதத்தின் கடைசி செவ்வாய்” அன்று திருத்தலத் திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படும். திருப்பயணிகளுக்கென செவ்வாய் முற்பகல் 12 மணிக்கும், ஞாயிறு முற்பகல் 11.30 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் நடக்கின்றன. செவ்வாய் மாலை 6.30 மணிக்கு நோயாளிகளுக்கான குணமாக்கும் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் நடக்கின்றன.
திருத்தலத்திற்கு வாருங்கள்!
நம்புங்கள் செபியுங்கள!;
நல்லது நடக்கும்!